articles

img

மோடி அவர்களே, உங்கள் சாதனைப் பட்டியல் எங்கே?-டி.கே.ரங்கராஜன்

கடந்த சில வாரங்களாக நடைபெற்று வருகிற 5 மாநில தேர்தல் பிரச்சாரங் களிலும், தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் மேற்கொண்ட பயணங்களிலும் பிரதமர் நரேந்திர மோடி, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா,  நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் சில பாஜக பிரமுகர்கள் பங்கேற்கிற கூட்டங்களில், நிகழ்வுகளில் பேசுகிற பேச்சுக்கள் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளன.  பிரதமர் நரேந்திர மோடி இந்த நாட்டு மக்க ளின் நலனைப் பற்றியோ அவர்களது வாழ்நி லையைப் பற்றியோ, நாடு எதிர்கொள்ளும் பொருளாதார பிரச்சனைகளைப் பற்றியோ தேர்தல் பிரச்சாரங்களில் பேசியிருக்கிறாரா என்று தேடித் தேடிப் பார்த்தாலும் எதுவும் கிடைக்கவில்லை. 

அவர் மீண்டும் மீண்டும் பேசியிருப்பது, “ஒரு தரப்பினரை திருப்திப்படுத்துவதைத் தவிர வேறு கொள்கை எதுவும் எதிர்க்கட்சிகளுக்கு இல்லை” என்பதாகும். மேலும், “பெண்களுக்கு எதி ரான மனநிலை கொண்டவர்கள் இந்த எதிர்க் கட்சிகள்”, “மகளிர் இடஒதுக்கீட்டிற்கு எதிராக பேசுகிறார்கள்”, “ராஜஸ்தானில் பெட்ரோல் விலை அதிகம்” - இதுதான்  மோடியின் பேச்சு

சாதனைகளை  முன் வைக்காததேன்?

உள்துறை அமைச்சர் அமித் ஷா, “போதைப் பொருள் கும்பல்களுக்கு காங்கிரஸ் ஆதரவு தருகிறது”, “மோடியின் ஆட்சியில் வளர்ச்சியை நோக்கி இந்தியா சென்றுகொண்டிருக்கிறது” - என்று பேசுகிறார். தெலுங்கானாவிற்கு சென்று, ஊழலில் முதன்மையானவர் சந்திர சேகரராவ் என்கிறார். தெலுங்கானாவில் பாஜக  வெற்றி பெற்றால் அனைவரும் அயோத்திக்குச் சென்று ராமரை இலவசமாக தரிசிக்க ஏற்பாடு செய்வோம் என்கிறார்.

மதுரை தியாகராஜர் கல்லூரி நிகழ்வில் பங்கேற்று பேசிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், “தமிழகத்தில் கோவில்களில் திருடுகிறார்கள். திருடும் சொத்து எங்கே போய் சேர்கிறது என்று தெரியவில்லை” என்று பேசுகிறார்.  

நமது கேள்வி என்னவென்றால், ஏன்  பிரதமர், உள்துறை அமைச்சர், நிதி அமைச்சர்  ஆகியோர் தங்களது பத்தாண்டு கால ஆட்சி யின் சாதனைகளைப் பற்றி இந்தப் பிரச்சாரங் களில் ஒரு வார்த்தை கூட பேசவில்லை? தங்கள்  சாதனைகளை முன் வைப்பதற்கான, மக்களி டம் பிரச்சாரம் செய்வதற்கான வாய்ப்பாக அவர்கள் ஏன் ஐந்து மாநிலத் தேர்தல் களத்தை பயன்படுத்தவில்லை? மாறாக, அவர்கள் ஏன் இத்தகைய அவதூறுகளை, உண்மையற்ற தகவல்களை, திரிபுகளை முன் வைத்து பிரச்சாரத்தில் பேசுகிறார்கள்? 

“ஒரு தரப்பினரை திருப்திப்படுத்தும் எதிர்க்கட்சிகளின் அரசியல்” என்று பிரதமர் மோடியும் பாஜக தலைவர்களும் அடிக்கடி பேசு கிறார்கள். சிறுபான்மை மக்கள், குறிப்பாக இஸ்லாமியர்களை  எதிர்க்கட்சிகள் தாஜா செய்கின்றன என்பதுதான் இதன் பொருள். ஆனால் இந்தியாவில் சிறுபான்மை மக்கள் எனக் குறிப்பிடப்படுபவர்கள் இஸ்லாமியர்கள் மட்டுமல்ல. 1992ல் இயற்றப்பட்ட தேசிய  சிறுபான்மையினர் சட்டம் , சிறுபான்மையினர் என்பவர்கள் யார் என்று தெளிவாக விளக்கு கிறது. இந்தியாவைப் பொறுத்தவரை இஸ்லா மியர்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், புத்தமதத்தைச் சார்ந்தவர்கள், பார்சிக்கள், சமண மதத்தைச் சேர்ந்தவர்கள் (ஜைனர்கள்) ஆகிய 6 பிரிவினர் தான் மதச்சிறுபான்மையினர் என்று வகைப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்களில் இஸ்லாமியர்கள் 14.2 சதவீதம் பேர், கிறிஸ்தவர்கள் 2.3 சதவீதம், சீக்கியர்கள் 1.7  சதவீதம், புத்தமதத்தைச் சேர்ந்தவர்கள் 0.7சத வீதம், ஜைனர்கள் 0.4 சதவீதம், பார்சிக்கள் 0.006 சதவீதம். ஆக மொத்தம் 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவில் ஒட்டு மொத்த சிறுபான்மை மக்களின் 19.3சதவீதம் மட்டுமே. 

சிறுபான்மையினர் சிலரை திருப்திப்படுத்துவது யார்?

இந்த சிறுபான்மை மக்களில் மோடி அரசிடம் மிக மிக அதிகமான சலுகைகளையும் அதீத உரிமைகளையும் எடுத்துக் கொண்டவர்; இன்னும் சொல்லப்போனால் ஒட்டுமொத்த நாட்டின் அனைத்துச் செல்வங்களையும் அபகரிப்பதற்காக மோடியின் கூட்டுக் களவாணி யாக இருந்து கொண்டிருப்பவர் யார் தெரியுமா? கவுதம் அதானி. ஜைன மதத்தைச் சேர்ந்தவர் இந்த அதானி. இவரது சகோதரர் வினோத் அதானி. பல லட்சம் கோடிகளை மோடியின் ஆசியோடு இந்திய மக்களிடமிருந்து சூறையாடிக் கொண்டிருப்பவர்கள் இவர்கள். பத்தாண்டு மோடியின் ஆட்சியில் அதிக பலன் பெற்ற ஒரே ஒரு சிறுபான்மை மதத்தைச் சேர்ந்த  நபர் இவர்தான். இப்போது சொல்லுங்கள், “ஒரு தரப்பினரை மட்டுமே திருப்திப்படுத்துவதை கொள்கையாகக் கொண்டவர்கள்” என்று  மோடி பேசுவது, எதிர்க்கட்சிகளுக்கு பொருந்துமா? இவருக்கு பொருந்துமா?

சிறுபான்மை  சமூக முதலாளிகள்

கவுதம் அதானி மட்டுமல்ல, ஜைன மதத்தைச் சேர்ந்த பெரும் தொழிலதிபர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் இருக்கிறார்கள். ஏசியன் பெயிண்ட்ஸ் நிறுவனம் உள்பட உள் நாட்டிலும் வெளிநாட்டிலுமாக தொழில் செய்யும் பெருமுதலாளிகள் பலரும் சிறுபான்மை மதமான ஜைன மதத்தைச் சேர்ந்தவர்கள்தான். இவர்கள் உள்ளிட்ட பெருமுதலாளிகளுக்கு கடந்த பத்தாண்டுகளில் மோடி அரசு கொடுத் திருக்கக்கூடிய சலுகைகள், வராக்கடன் என்று கூறி ரத்து செய்துள்ள கடன்கள் எவ்வளவு என்று இதுவரை வெளியிடவில்லை. வங்கி களும் இதுவரை தள்ளுபடி செய்துள்ள வராக்கடன் யார் யாருக்கு என்று  விபரத்தை வெளியிட மறுக்கின்றன. உண்மை  என்ன வென்றால், இதுவரை தள்ளுபடி செய்யப் பட்டுள்ள வராக்கடனில் பெரும்பகுதி அதானி மற்றும் அவரைச் சார்ந்த முதலாளிகளாக உள்ள ‘சிறுபான்மை சமூகத்தைச்’ சேர்ந்தவர் களுக்குத்தான். 

பார்சி சமூகத்தவர்கள் இந்தியாவில் வெறும் 0.006 சதவீதம் பேர்தான் உள்ளனர். ஆனால் உலக அளவில் வர்த்தகத்தில் முக்கியமான நபர்களாக இவர்கள் உள்ளனர். இந்தியாவின் மிகப்பெரிய தொழில் குழுமமான டாடா, பார்சி  சமூக முதலாளிக்குச் சொந்தமானது. புதிய நாடாளுமன்ற கட்டுமானப் பணி டாடா குழு மத்திற்குத்தான் செல்கிறது. 

இஸ்லாமியர்- கிறிஸ்தவர் மீது வெறுப்பை, விஷத்தை கக்குவது 

உண்மையில் அனைத்து சிறுபான்மை சமூகங்கள் மீதான வெறுப்புணர்வாக பாஜக ஆட்சியாளர்களின் நடவடிக்கை இல்லை. மாறாக இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் ஆகிய இரண்டு சிறுபான்மை சமூகங்கள் மீது குறி வைத்து இந்துத்துவா சக்திகள் வெறுப்பையும் விஷத்தையும் கக்குகின்றன. நாட்டின் எதிர்க்கட்சிகள், ஜனநாயக சக்திகள் - எந்தவொரு சிறுபான்மை மக்கள் மீதான தாக்குதலையும் வெறுப்புணர்வையும் எதிர்த்து குரல் கொடுத்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாகத்தான், இந்துத்துவா சக்திகளால் மிகக் கடுமையாக குறி வைத்து தாக்கப்படுகிற இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவ சிறுபான்மை மக்களுக்கு ஆதரவாக, அவர்களது பாதுகாப்பை உறுதிசெய்வதற்காக குரல் கொடுக்கின்றன. இதைத்தான் பிரதமர் மோடி, ஒரு தரப்பினரை திருப்திப்படுத்தும் எதிர்க்கட்சிகள் என்று பழித்துப் பேசுகிறார்.  ஆனால் மற்றொரு சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த அதானி உள்ளிட்ட கார்ப்பரேட் பெரு முதலாளிகளிடம் சரணடைந்து சேவகம் செய்கிறார். 

இந்துமதவெறியும் கார்ப்பரேட்டுகள் சேவையும்

இதுஒருபுறமிருக்க அந்த சிறுபான்மை மக்கள் அனைவரும் நினைத்தாலும் கூட ஒரு குறிப்பிட்ட கட்சியை ஆட்சிக்கு கொண்டுவந்து விட முடியுமா? என்ற கேள்வியும் உள்ளது. சிறுபான்மை மக்களின் வாக்கை மட்டுமே பெற்று எப்படி அரசியல் கட்சிகள் வெற்றிபெற முடியும்? அதற்கு வாய்ப்பில்லை என் பது மோடிக்கும் தெரி யும், அமித்ஷாவுக் கும் தெரியும். ஆனால் மதவெறி யைத் தூண்டுவதே அவரது முதன்மை யான நோக்கம். ஒரு  பக்கம்  இந்துமதம்சார்ந்த வெறியை  தூண்டுவது, அதன் மூலம்இந்துமத மக்களின் வாக்குகளை அணி திரட்ட முயற்சிப்பது, மறுபுறம் ஆட்சி அதிகா ரத்தைப் பயன்படுத்தி கார்ப்பரேட்டுகளுக்கு சேவகம் செய்வது என்ற தங்களது இலக்கை  நிறைவேற்றுவதுதான் இவர்களது நோக்கம்.

வெற்று டமாரம்

அதேபோல, பெண்கள் இடஒதுக்கீட்டிற்கு எதிராகவும் பெண்களுக்கு எதிராகவும் எதிர்க்கட்சிகள் பேசுகிறார்கள் என்ற மோடியின் பிரச்சாரம் முற்றிலும் அபத்தமானது. பெண்கள் இடஒதுக்கீடு சட்டத்தை நிறை வேற்றிவிட்டதாக பாஜக ஆட்சியாளர்கள் மார்தட்டிக் கொள்கிறார்கள். ஆனால் 2024 தேர்தலில் அந்த இடஒதுக்கீடு அமலாகப் போகிறதா? இந்தக் கேள்விக்கு அவர்களிடம் விடை  இல்லை. நிறைவேற்றப்பட்ட சட்டத்தில் மக்கள்  தொகை கணக்கெடுப்பு தொகுதி மறுவரை யறை ஆகியவற்றுக்குப் பிறகுதான் இடஒதுக்கீடு அமலாகும் என்று புதிதாக சேர்க்கப்பட்ட விதியின் காரணமாக 2029 அல்லது 2034இல் அமலுக்கு வரும் என்ற நிலையே உள்ளது.

எனவே பெண்களுக்கு உரிமை அளித்து விட்டதாக மோடி பிதற்றுவது வெற்று டமாரமே ஆகும். இதேபோல்தான் அமித்ஷாவும், நிர்மலா சீதாராமனும் அரசியல் பேசுவதற்குப் பதிலாக எதிர்க்கட்சிகள் மீது அவதூறுகளை அள்ளி வீசியிருக்கிறார்கள். அவர்களது நோக்கம் எதிர்க்கட்சிகளின் அணிசேர்க்கையாக எழுந்துள்ள இந்தியா அணிக்கு எதிராக ஏதேனும் திரியை கொளுத்திப் போட முடியாதா என்பது தானே தவிர, இந்திய மக்களின் நலன் அல்ல.